புலவர் சிவ. கன்னியப்பன் 195

நாணுதல் இன்றிச் சீடன்
       நண்ணுதற் கெளிய னாகும்
ஆணவம் அற்ற தன்மை
       அமைந்தவன் அவனே ஆசான்.       3

மன்னிய தனது கீர்த்தி
       மறைந்திட நேர்ந்திட் டாலும்
தன்னிலும் தனது சீடன்
       தகுதிகள் மிக்கோன் என்ன
மன்னவை மதிக்கு மாறு
       மாநிலம் வாழ்த்தக் கண்டால்
அன்னையின் உவகை யென்ன
       ஆனந்தம் அடைவான் ஆசான்.       4

ஊதியம் குறைந்து நெஞ்சில்
       உளைச்சலே மிகுவ தேனும்
பூதலத் திளைஞ ருக்கு
       நல்வழி புகட்டு கின்றோம்
ஆதலின் ஆசான் வேலை
       அறந்தலை சிறந்த தென்ற
காதலால் கடமை செய்யும்
       கண்ணிய வானே ஆசான்.       5

141. கடன் வாங்குதல்

கடன்பட்டே இன்புறுதல் சுவர்க்க மேனும்
       கடன்வாங்கும் துன்பத்தைக் தவிர்க்க வேண்டும்
கடன்தீர்க்கும் வழிவகையை எண்ணி டாமல்
       கடன்பட்டிங் கழிவடைந்தோர் எண்ணி லாதார்
உடன்பட்ட நிபந்தனைக்கும் இழுக்கில் லாமல்
       உற்றகடன் தீர்ப்பதுதான் ஒழுக்க மாகும்
திடம்பட்ட கொள்கையுடன் கடனைத் தீர்க்கும்
       திறமையின்றிக் கடன்வாங்கல் தீமை சேர்க்கும்.       1