கைத்தொழில் காத்திடும் ஒருநாடே கலகம் குறைந்துள திருநாடாம்; எத்தனைக் கெத்தனை எந்திரமோ அத்தனைக் கத்தனை தொந்தரவே. (கை)10 கைத்தொழில் தம்மைக் காத்திடுவோம்; கலகம் பற்பல தீர்த்திடுவோம்; பொய்த்தொழில் யாவும் குறைந்திடவே பூமியில் நாமே சிறந்திடுவோம். (கை)11 ஏழை செல்வன் என்றுவரும் எல்லாப் பிணக்கும் நின்றுவிடும்; வாழிய வாழிய கைத்தொழில்கள்! வாழிய நித்திய சத்தியமும்! (கை)12 144. சத்திய விரதம் சத்திய விரதம் சாதிப்போம்; சமரச வாழ்க்கை போதிப்போம்; உத்தம சேவை இதுவாகும்; உலகத் துக்கே பொதுவாகும். 1 அன்பின் பெருமையை எடுத்துரைப்போம்; ஆயுதக் கொடுமையைத் தடுத்துரைப்போம்; துன்பம் யாவையும் சகித்திடுவோம்; தூயநன் னடைத்தைகள் வகித்திடுவோம். 2 பொய்யும் இம்சையும் வஞ்சனையும் பூதலம் எங்கும் மிஞ்சினதால் மெய்யும் கருணையும் தழைத்திடவே வேண்டிய விதங்களில் உழைத்திடுவோம். 3 வீரம் என்பது கொலையன்று வெற்றியும் அதனால் நிலையன்று; தீரம் என்பது திடசாந்தம்; தெரிவிப் பதுநம் சித்தாந்தம். 4 |