200நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஜாதியும் மதங்களும் வீட்டோடு
       சமத்துவம் யாவரும் நாட்டோடு
நீதியும் அறங்களும் உலகெங்கும்
       நிலைத்திடத் தவம்புரி கிறசங்கம்.       5

சாந்தியைப் படித்தது நம்நாடு;
       சத்தியம் கொடுத்தது நம்நாடு;
காந்தியைத் தருவது நம்தேசம்;
       கடமை நமதே உபதேசம்.       6

145. உலக சமாதானம்

கைத்தொழில் களைநாம் மெத்தவும் பரிவுடன்
       காப்பது நம்முடைக் கடனாகும்;
எத்தனை ஏழையின் நித்திய ஜீவனம்;
       எண்ணுவ தேவெகு புண்ணியமாம்.       (கை)1

கைத்தொழில் குறைந்தது பொய்த்தொழில் நிறைந்தது
       கஷ்டங்கள் யாவையும் அதனாலே
எத்திசை எங்கணும் யுத்தமென் றுரைப்பதும்
       எதனால் என்பதை எண்ணிப்பார்!       (கை)2

எந்திரம் புகுந்தது தந்திரம் மிகுந்தது
       ஏழைகள் பிழைத்திட வழியில்லை;
மைந்தர்கள் வேலையை எந்திரம் செய்திட
       மக்களின் வேலை மனத்தாபம்.       (கை)3

‘எந்திரம் குவித்திடும் அந்தமி‘ல் சரக்கினை
       எங்கே விற்பது? என்பதற்கே
சொந்தமல்லாப் பிற நாடுகள் மேற்படை
       தொடுப்பதும் நடப்பனபார்!       (கை)4

ஆலையும் எந்திரச் சாலையும் வந்ததில்
       ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்
வேலைகள் போனவர் ஓலமிட் டலைந்திடும்
       வேதனை தினந்தினம் விரிவாக்க.       (கை)5