பஞ்ச மென்ற ஏக்கமும் பகைமை யென்ற கொச்சையும் நஞ்சை யொத்த கோபமும் நாச மூட்டும் இச்சையும் கெஞ்சி நின்று சோறுதின்னும் கீழ்மை யான எண்ணமும் அஞ்சி அஞ்சி அன்பினுக்கே அடிமை வேலை பண்ணுமே. 6 முக்தி என்ற ஆசையும் மோட்ச மென்று பேசலும் பக்தி என்ற பாசமும் பரமன் என்ற நேசமும் சத்தி யத்தின் மேன்மையும் சாந்தி என்ற வெற்றியும் அத்த னைக்கும் மூலமாம் அன்பு என்ற ஒன்றுதான். 7 போழ்ந்து நம்மை நீக்கிவைக்கும் பேத புத்தி போகவும் சூழ்ந்து நின்று மதிகெடுக்கும் சூது பொய்கள் ஏகவும் ஆழ்ந்த கல்வி யின்றிக்கூட அன்பு என்ற ஒன்றினால் வாழ்ந்தி ருக்க லாகும் அன்பு வளர்க வாழ்க என்றுமே. 8 நேய மற்ற மதவெறிக்கு நிலைய மான நேசமாம் பேயுங் கூட நடுநடுங்கிப் பேத வித்துக் கூசுமாம் நாய்ந ரிக்கும் அச்சமூட்டும் நவக ளிக்குள் காந்தியார் போய்ந டந்த யாத்தி ரைக்குள் புனித அன்பு சேர்ந்ததாம். 9 |