22நாமக்கல் கவிஞர் பாடல்கள்


துன்பம் எதையும் தாங்கிடலாம்
       துயரம் உடனே நீங்கிடலாம்
அன்பும் அறிவும் பெரிதாகும்
       அச்சம் என்பதும் அரிதாகும்.       3

சிரிப்பும் களிப்பும் நிறைந்துவிடும்
       சிடுசிடுப் பெல்லாம் மறைந்துவிடும்
விருப்பம் எதுவும் சித்திபெறும்
       வித்தகக் கண்ணன் பக்தியினால்.       4

மாடுகள் மேய்க்கும் வேலையிலும்
       மகிழ்ந்திடும் கண்ணன் லீலைகளால்
பாடுபட் டுழைத்திட அஞ்சோமே
       பாரில் யாரையும் கெஞ்சோமே.       5

தூதுவன் ஆகித் துணைவருவான்
       தொழும்பனைப் போலும் பணிபுரிவான்
ஏதொரு தொழிலும் இழிவல்ல
       என்பது கண்ணன் வழிசொல்லும்.       6

எல்லா உயிரும் இன்பமுறும்
       இன்னிசை பரப்பித் தென்புதரும்
புல்லாங் குழலை ஊதிடுவான்
       பூமியில் கடமையை ஓதிடுவான்.       7

பக்தருக் கெல்லாம் அடைக்கலமாய்ப்
       பாதகர் தங்களை ஒடுக்கிடுவான்
சக்திகள் பலவும் தந்திடுவான்
       சங்கடம் தீர்த்திட வந்திடுவான்.       8

ஆடலும் பாடலும் மிகுந்துவிடும்
       அழகன் கண்ணன் புகுந்தஇடம்
ஓடலும் ஒளித்தலும் விளையாட்டாம்
       ஒவ்வொரு செயலும் களியாட்டே.       9