புலவர் சிவ. கன்னியப்பன் 23

10. கண்ணன் திருவருள்

கண்ணன் வருகிற இந்நாளே
       களிப்புகள் தருகிற நன்னாளாம்.
திண்ணம் அவனருள் உண்டானால்
       தீங்கெதும் நம்மை அண்டாது.       1

அசுரத் தனங்களை இகழ்ந்திடவும்
       அன்புக் குணங்களைப் புகழ்ந்திடவும்
விசனம் என்பதை ஒழித்திடவும்
       வித்தகக் கண்ணன் வழித்துணையாம்.       2

அரசரின் குலத்தில் பிறந்தாலும்
       ஆயர்தம் குடிசையில் வளர்ந்தவனாம்
ஒருசிறு பேதமும் எண்ணாமல்
       ஒற்றுமை காட்டும் கண்ணாளன்.       3

எங்கும் எதிலும் வேடிக்கை
       இழைப்பது கண்ணன் வாடிக்கை
இங்கும் நாம்அதைக் கடைப்பிடித்தால்
       இன்பம் வாழ்க்கையில் தடைப்படுமா?       4

அடுக்குப் பானையை உருட்டிடுவான்;
       அதட்டப் போனால் சிரித்திடுவான்.
துடுக்குக் கண்ணனைக் கண்டவுடன்
       தோன்றிய கோபம் சுண்டிவிடும்.       5

ஒன்றும் தெரியாப் பாலன்போல்
       உலகை நடத்தும் லோலன்காண்
என்றும் இளமை குறையாமல்
       எல்லாப் பொருளிலும் உறைவான்காண்.       6

நம்பின மெய்யரைத் தாங்கிடுவான்;
       நடிக்கும் பொய்யரை நீங்கிடுவான்.
வம்புகள் செய்தால் செல்லாவாம்;
       வாதுகள் அவனிடம் வெல்லாவாம்.       7