மயிர்ச்சடை முடியும் முற்றும் மழித்ததாம் தலையும் மற்றும் பயிற்சிகொள் காவி ஆடை பலவேறு வேஷ மெல்லாம் வயிற்றினை வளர்ப்ப தற்கே வழியெனக் கண்டும் ஞான முயற்சிமேற் கொள்ள மாட்டாய் முழுமட மதியே! நீதான். 14 நரம்பெலாம் தளர்ந்து நைந்தும் மயிரெல்லாம் நரைத்த பின்னும் குரங்குபோல் முகமும் பற்கள் குடிபோன மடிவா யோடும் கரங்களால் கோலை ஊன்றிக் கால்கள் தள் ளாடினாலும் நிரம்பிய பழைய ஆசை ஆணிவேர் நெகிழ வில்லை. 15 குளிர்தனைப் பொறுக்க மாட்டான் கூறுடைக் கிழவன்நொந்து குறுகியே இரவு முற்றும் மறுகியே குளிரைத் தாங்க, தளர்வுடன் மோவாய்க் கட்டை தன்முழங் காலில் முட்ட, தரைதனில் சுருண்டு தூங்கித் தள்ளிய இரவு நீங்க, வெளியிடை வெயிலிற் காய்ந்து விருப்புடன் கால்கள் நீட்டி விறகிடைத் தீயிற் காய்ந்து, விருந்தெனப் பிச்சைச் சோற்றை அளிமர நிழலில் உண்பான்; அம்மரத் தடியே வாசம்; அந்நிலை அவனும் கூட வீட்டின் ஆசா பாசம். 16 |