258நாமக்கல் கவிஞர் பாடல்கள்

180. வாக்குமூலம்
(மகாத்மா காந்தி, விசாரணையின்போது
நீதி மன்றத்தில் கூறியதன் சாரம்)

‘ஆங்கில அரசியல் அதுமிக நல்லது
ஈங்கற் கொன்றும் இணையிலை‘ யென்றே
எண்ணியே இருந்த என்மன முடைந்து
மண்ணிலே அதுமிக மயக்குடைத் தென்று
கண்ணிய முடையோர் கலந்திடார் அதிலெனத்       5

திண்ணமாய் நம்பித் திரும்பிய காரணம்
ஈங்குள யாவரும் இந்திய ரனைவரும்
ஆங்கில மக்களும் அரசியல் அதிபதி
தாங்களும் அறியச் சத்தியம் தெரிய
ஓங்கிய கடமையில் உரைத்திட நின்றேன்.       10

ஆதிநாள் தென்னாப் பிரிக்கா தன்னில்
நீதியும் எங்கள் நிலைமையும் கண்டேன்
இந்திய னாகவே இருந்தத னாலே
சொந்தமென் றுரிமை சொல்லுதற் கொன்றும்
இந்தமா உலகில் எமக்கிலை யென்பதை.       15

அங்கே முதலில் அறிந்திட லானேன்
என்கிற போதும் ஏகாதி பத்யம்
போய்விடும் போலப் போரில் எதிர்த்த
போயர் சமரிலும் ஜுலுவர் போரிலும்
அந்தநா டாளும் ஆங்கிலே யருக்கே.       20

என்னா லான உதவிகள் புரிந்தேன்
சொற்பொரு ளுடலும் சோர்விலா துதவி
பற்பல விதமாய்ப் பட்டமும் பரிசும்
ஏட்டினில் கூட என்னைப் புகழ்ந்து
காட்டியே எழுதும் கனதையும் பெற்றேன்.       25