26நாமக்கல் கவிஞர் பாடல்கள்

13. துணைபுரி முருகன்

முருகனென்றபெயர் சொன்னால் - தோழி
       உருகு தென்றனுளம் என்னே!
பெருக நீர்விழிகள் சோர - மனம்
       பித்துக் கொள்ளுதுள் ளூர!       (முரு)1

கந்த னென்றுசொல்லும் முன்னே - என்
       சிந்தை துள்ளுவதும் என்னே?
உந்தும் பேய்ச்சுரைகள் உளறி - வாய்
       ஊமை யாகுதுளம் குளிர!       (முரு)2

வேல னென்றபெயர் கேட்டே - ஏனோ
       வேர்வை கொட்டுதுதன் பாட்டில்!
கால னென்றபயம் ஓடிப் - புதுக்
       களிசிறக்குதடி சேடி       (முரு)3

குமர னென்றஒரு சத்தம் - கேட்டுக்
       குளிர வந்ததடி சித்தம்!
அமர வாழ்வுபெறல் ஆனேன் - இனி
       அடிமை யார்க்குமிலை நானே!       (முரு)4

குகனெனச் சொல்வதற் குள்ளே - நான்
       அகம்ம றந்தேன்அது கள்ளோ!
தகதக வென்றொரு காட்சி - உடனே
       தண்ணென முன்வரல் ஆச்சு!       (முரு)5

ஆடும் மயிலில்வரக் கண்டேன் - சொல்ல
       அழகும் அதைவிடஒன் றுண்டோ?
வீடு வாசல்பொருள் எல்லாம் - துச்சம்
       விட்டு மறந்தனடி நல்லாள்!(முரு)6

பச்சைக் குழந்தையவன் மேலே - என்றன்
       பற்று மிகுந்ததெத னாலே?
இச்சை யாரமிகத் தழுவி - நானும்
       இணங்கி யிருந்த தனின்பம் முழுகு!       (முரு)7