பட்டும்பட் டாடையும் கட்டிக் கழித்திட்ட பட்டையக் காரனின் பந்தலிலே கட்டக்கை யகலக் கந்தையு மின்றிநாம் கத்துவ தென்னடி சித்திரமே! 31 மிஞ்சுவ ளங்கள் நிறைந்து சுகங்கள் மிதந்து கிடந்திட்ட தேசத்திலே பஞ்சமும் கொள்ளைப் பலவகை நோய்களும் மிஞ்சுவ தென்னடி ரஞ்சிதமே! 32 பாலுந் தினுசுப் பழவகை யும்மூன்று வேளையும் தின்று வெறுத்தவர்நாம் பாழும் வயிற்றுக்கும் கூழுமின் றியிப்போ பற்றுத டிவயிறு வற்றுதடி! 33 வேதமொ டுகுறள் நீதி முறைகளும் ஓது மடியெங்கள் வீதியிலே வாது வழக்கொடு வஞ்சனை மோசமும் வஞ்சிய சேயிப்போ மிஞ்சுதடி! 34 புத்தம் புதியவ ரானா லும்உயிர் தத்தம் அவருக்குத் தந்தவர்கள் ஒத்துப் பிறந்தவர் செத்துக் கிடந்தாலும் ஒத்தி நடந்திடக் கற்றோமடி! 35 கட்டுக் கடங்காத கஷ்டங்கள் வந்தாலும் விட்டுப் பிரியாத கட்டுடையோம் விட்டுத் தனித்தனி எட்டிய தாலிந்த வேதனை வந்தது மாதரசே! 36 கூடப் பிறந்த சகோதரர் கள்மிக வாடியிருந்து வருந்துகையில் மோடி யிருந்து தனித்தனிச் சுகித்தால் மோசம் போனோமடி மொய்குழலே! 37 |