மன்னுமந்த வடமேற்கு மாகா ணத்தில் மத்தியமா காணத்தில் அயோத்தி தன்னில் மின்னனைய வேகத்தில் சிப்பாய் மார்கள் மிடுக்காக விடுதலைப்போர் தொடுக்க லானார். 9 எழுச்சிகொண்ட புரட்சி முடியிழந்த மன்னர்பலர் முகம்ம லர்ந்தார்; முன்னிருந்த பெருமைவர முடியும் என்றே துடிதுடித்துச் சிப்பாய்க்குத் துணைவ ரானார்; துணைபுரிய மக்களையும் தூண்டி விட்டார்; வடிவமைந்த வீரர்பெண் ஜான்ஸி ராணி, வல்லமைசேர் தாண்டியா தோப்பி யோடும், படியிழந்த பேஷ்வாவாம் நானா சாகிப், பந்துவாம் ராவ்சாகிப், அஸிமுல் லாதான். 10 குடும்பத்தின் சொத்திழந்த குன்வார் சிங்கும், குலமுறையில் மொகலாயன் பிரோஸ் ஷாவும், கடும்பக்தன் வெள்ளையர்பால் ‘பென்ஷன்‘ வாங்கும் கதியடைந்த கான்பகதூர் கான்என் பானும், இடம்போன இப்படிப்பேர் பலரும் சேர்ந்தே எழுச்சி கொண்ட புரட்சிதனை இயக்க லானார்; படம்கொண்ட நாகம்போல் சீறிப் பாய்ந்து பாமரரும் வெள்ளையரைப் பலியிட் டார்கள். 11 முட்டமுட்ட மூவைந்து மாத காலம் மும்முரமாய்ச் சுதந்தரப்போர் முழங்கிற் றப்பால் திட்டமிட்ட போர்முறைகள் வருந்தி டாமல், திடமிருந்தும் ஒத்துழைக்கச் சேர்ந்தி டாமல், கிட்டிவிட்ட வெற்றிகளைக் கட்டிக் காத்துக் கெட்டிபண்ணும் கிரியைகளைச் செய்தி டாமல் தொட்டெடுத்த சிப்பாய்கள் தோற்றிட் டாலும் சுதந்தரத்தின் உதயமதைத் தோன்றச் செய்தார். 12 |