புலவர் சிவ. கன்னியப்பன் 287

கண்டபலன் ஒன்றுமின்றிக் - கடைசியில்
தன்கையே தனக்குதவி என்றுதுணிந்தார்.
அநியாயச் சட்டங்களைச் - சிறிதும்
அஞ்சாமல் சாந்தமுடன் எதிர்ப்பதென்றே
இந்தியரை ஒன்று திரட்டிக் - கேட்க
எல்லாரும் சரியென்றே ஒப்புக்கொள்ளவே
தொடுத்தார் அறப்போரை - இந்தத்
தொல்லுலகம் முன்னறிந்த தில்லையெனலாம்.
சாந்தமும் சந்தியமும் - நம்பும்
சர்வேசன் கருணையும் படையாகக்       45

காந்தியும் போர்தொ டுத்தார் - தாமே
கைவிரற் பதிவுசெய்யும் சட்டமறுத்தார்.
தண்டனை யிரண்டுமாதம் - பெற்றுச்
சந்தோஷ மாகச்சிறை முதலில்சென்றார்.
ஆயிரக் கணக்காக - இந்தியரும்
அங்கிருந்த சீனர்களும் சிறைக்குவந்தார்.
இந்தவிதம் எட்டுவருடம் - அங்கே
இடைவிடாம லேயுழைத்தார் இடர்பொறுத்தார்.
பலமுறை சிறைபுகுந்தார் - மக்கள்
பத்தினியுங் கூடச்சிறைப் பயத்தைவிட்டார்.       50

கல்லுடைத்துச் செக்கிழுத்தார் - சிறையின்
கக்கூசில் மலஜலம் வாரியெடுத்தார்.
வீதியில் விலங்குடனே - சர்க்கார்
வேண்டுமென்று நடத்தவும் சகித்திருந்தார்.
இத்தனை துயரும் சகித்தே - அங்கே
இந்தியரின் கண்ணியத்தைக் காத்து வைத்தார்.
கைரேகைப் பதிவு செய்தல் - இந்தியரைக்
கட்டாயக் கூலி செய்யக் கப்பலேற்றல்
தலைவரி கொடுப்பதிலை - சர்க்கார்
தள்ளிவிடச் சம்மதிக்க வெற்றியடைந்தார்.       55