புறப்பட் டார்காந்தி - அந்தப் போதுஎழுந்த உணர்ச்சியை ஏதுசொல்லுவோம்! ஆச்சரியம்! ஆச்சரியம்! - அதை ஆராலும் முடியச் சொல்ல முடியாது. டாண்டியில் சட்ட மறுத்தார் - ஒருநாள் ஜாமத்தில் வந்து சர்க்கார் கைதுசெய்தார். நாட்டில்எந்த மூலை முடுக்கும் - சண்டை நடந்ததில் லட்சம்பேர் சிறை புகுந்தார். சாத்வீகம் தவறாமல் - ஜனங்கள் சந்தோஷ மாகப்பல ஹிம்சை சகித்தார். 90 இந்தவிதம் பத்துமாதம் - சண்டை இடைவிடா மல்எங்கும் நடந்திடவே காந்தியை வெளியில் விட்டுச் - சர்க்கார் காந்தி - இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இரண்டாம் வட்டமேஜைக் - கூட்டத்(து) இந்தியக் காங்கிரசின் பிரதிநிதியாய் வீரமொழி கள்புகன்றார் - ஏழைகள் விடுதலை விட்டுஎதுவும் வேண்டாம்என்றே இந்தியா வருமுன்னால் - சர்க்கார் இர்வின் உடன்படிக்கை மீறிவிட்டதால். 95 வில்லிங்டன் வைசிராயைப் - பார்க்க விடைவர வேணுமென்று சேதிவிடுத்தார். வைசிராய் மறுத்துவிட்டார் - வேறு வழியின்றிக் காந்தியும் கைதியானார். சிறையில் இருக்கும்போதே - அங்கே சீமையில் மந்திரி திட்டம் ஒன்றினால் தாழ்த்தப்பட்ட இந்துக்களைத் - தேர்தல் தனித்தனித் தொகுதியிற் பிரித்து வைத்தார். காதில் விழுந்த உடனே - காந்தி கட்டாயம் பட்டினியிற் சாவேன் என்றார். 100 |