"புத்தம் புதியபெண்ணே போந்தகுறை என்னசொல்லு சித்தம் கலங்காதே சின்னவளே" என்று சொன்னேன். 2 வெள்ளைத் துகிலுடுத்து வெட்டிருந்த பட்டணிந்து கள்ளக் குறிசிறுதும் காட்டா முகத்தினளாய் அள்ளிச் செருகிவிட்ட அழகான கூந்தலுடன் பிள்ளை மொழிவதெனப் பின்னுகின்ற சொற்பேசி மெள்ளத் தலைகுனிந்தே மெல்லியளாள் நின்றிருந்தாள். 3 "எங்கிருந்தே இங்குவந்தாய்? என்னகுறை பெண்மணியே? சங்கிருந்த வெண்ணிறத்தாய்! சஞ்சலத்தால் வந்ததுண்டோ? இங்கிருந்தே உள்ளதைநீ என்னுடைய மக்களுடன் பங்கிருந்து கொள்வாய் நீ பலமொழிவாய்" என்றுசொல்லி இங்கிதம்நான் சொன்னவுடன் இருநாளும் மண்டியிட்டு 4 குன்றி உரைகுழறிக் குளிரால் நடுங்கினாள்போல் சின்னஞ் சிறுகுரலால் சிந்தைமிக நொந்த வளாய் "உன்னுட னேபிறந்தோன், ஊரைவிட்ட ஆரியனாம் |