"எந்தனுடை ஊரின்மேல் ஏக்கமின்றி வந்ததனால் உன்னுடை உத்தரவில் ஓலைவிட ஆசை" என்றாள். 14 "என்ன தடைஇதற்கே? எழுதுவாய்" என்றுசொன்னேன். சொன்னவுடன் என்றனக்குத் தோன்றா மொழிகளிலே கன்னியவள் தன்னவர்க்குக் காகிதமும் போட்டுவிட்டாள். பின்னைச் சிலநாளில் பெண்ணவளின் தன்னினத்தார் அண்ணன்என்றும் தம்பியென்றும் அக்கமென்றும் பக்கமென்றும் 15 வந்தார் பலபேர்கள் வந்தவரைச் சொந்தமுடன் தந்தேன் இடமவர்க்கும் தக்க விருந்தும் இட்டேன் சந்தேகம் தானவர்மேல் சற்றும் நினைக்காமல் அந்தோ! இருந்துவிட்டேன் அந்தஒரு காரணத்தால் நொந்தேன் நிலைதவறி நோவேன் விதியினையே. 16 அன்னவர்கள் கொண்டுவந்த அழகாம் பலபொருள்கள் மின்னுகின்ற கண்ணாடி மினுக்குகின்ற பொம்மைகளும் இன்னும் மயக்குகின்ற என்னென்ன வோபொருள்கள் |