352நாமக்கல் கவிஞர் பாடல்கள்

216. சுதந்தரமில்லா ஒரு நாடு

சுதந்தர திருநாள் தொழுவோம்நாம்
       துன்பம் தொலைத்துஇனி எழுவோம்ஆம்
நிதந்தரும் தரித்திரம் நீங்கிடுவோம்
       நீதியும் அறங்களும் ஓங்கிடுவோம்.       (சுதந்)1

கோயில் குளங்களை இடித்தெறியும்
       குழந்தைகள் பெண்களைக் கொலைபுரியும்
பேயின் கூத்தினைத் தடுத்திடவே
       பெரிதும் சுதந்தரம் தொடுத்திடுவோம்.       (சுதந்)2

மூர்க்கர்கள் உலகினை ஆள்வதையும்
       முற்றிலும் தருமம் தாழ்வதையும்
போக்கிடச் சுதந்தரம் வேண்டுவோம்
       புண்ணிய முறைகளில் ஆண்டிடுவோம்.       (சுதந்)3

பகைவர்கள் தங்களுக்கு உபசாரம்
       பக்தரைச் சிறையிடும் அபசாரம்
நகைமிகும் அரசியல் முறைமாற
       நம்முடைச் சுதந்தரம் நிறைவேற.       (சுதந்)4

சுதந்தரம் இல்லா ஒருநாடு
       சூழ்புலி பேய்மிகும் பெருங்காடு;
எதிர்ந்திடும் துயர்களைச் சகித்திடுவோம்;
       எம்முடைச் சுதந்தரம் வகித்திடுவோம்.       (சுதந்)5

பொதுஜன நாயக முறைகாணும்
       பூரண சுதந்தரம் பெறவேணும்;
எதுதடை நேரினும் அஞ்சாமல்
       எவரையும் அதற்கு இனிக் கெஞ்சாமல்.       (சுதந்)6

குறிப்புரை:- நிதம் - நாள்தோறும்; மூர்க்கர்கள் - கொடியவர்கள்,
பிடிவாதம் பிடிப்பவர்கள்;துயர் - துன்பம்; சகித்திடு - பொறுத்துக்கொள்.