217. சுதந்தரத் தேவி சுதந்தரத் தேவியைத் தொழுவோம் வாரீர் சுகம்பெற அதுதான் வழியாம் பாரீர் பதந்தரும் மானிடப் பண்புகள் வளரும் பரமனை உணர்ந்திடப் பக்தியும் கிளரும். 1 விடுதலை அடைந்தது சுதந்தரம் இல்லை வெற்றிகள் என்பதும் வெறிதரும் தொல்லை கெடுதலை நீக்கிடக் கிருபைகள் செய்யும் கேண்மையின் வடிவே சுதந்தரத் தெய்வம். 2 அன்னிய உதவியை அவசியம் நீக்கும்; அதுதான் சுதந்தர ஆற்றலைக் காக்கும்; பொன்னிலும் உயர்ந்தது சுதந்தரச் சிறப்பு; பொறுமையும் வாய்மையும் அதற்குள் பொறுப்பு.3 ஆயுத வெறிகளை அப்புறம் ஒதுக்கி, அன்பின் நெறிகளில் அரசியல் புதுக்கி, சாய்கிற வரையிலும் சமரசம் பரப்பி, சண்டைகள் விலக்குதல் சுதந்தரப் பொறுப்பு. 4 அற்புதன் காந்தியின் அறநெறி கொண்டோம்; அடிமை விலங்குகள் அகன்றன கண்டோம்; கற்பெனக் காந்தியின் நன்னெறி காப்போம். கருணையும் ஆற்றலும் கலந்திட நோற்போம். 5 குறிப்புரை:- பரமன் - மேலானவனான இறைவன்; அறநெறி - தருமவழி; கருணை -அருள்; ஆற்றல் - சக்தி; சமரசம் - இருவரையும் ஒப்புநோக்கிச் சமம் செய்தல். 12 நா.க.பா. பூ.வெ. எ. 489 |