38நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
       சமரசம் நாட்டினில் கண்டவனாம்;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
       நிறைகுறை யாமல் செய்தவனாம்.       15

உத்தமன் காந்தியின் அருமைகளை
       உணர்ந்தவன் தமிழன்; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்;
       சாந்தம் தவறா துடனிருந்தான்.       16

குறிப்புரை:- (1) பொறியின் ஆசை - ஐம்பொறிகளின் விருப்பம்.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள்.
(2) நந்தா விளக்கு - அணையா விளக்கு (5); பெட்பு - ஆசை,
அன்பு, பெருமை (7); நேர் - ஒப்பு (8); வெற்பு - மலை;
சாந்தம் - அமைதி.

20. இளந்தமிழனுக்கு

இளந்த மிழா! உன்னைக் காண
              இன்ப மிகவும் பெருகுது!
       இதுவ ரைக்கும் எனக்கிருந்த
              துன்பம் சற்றுக் குறையுது!
வளந்தி கழ்ந்த வடிவி னோடும்
              வலிமை பேசி வந்தனை.
       வறுமை மிக்க அடிமை நிற்கு
              வந்த ஊக்கம் கண்டுநான்
தளர்ந்தி ருந்த சோகம் விட்டுத்
              தைரி யங்கொண் டேனடா!
       தமிழர் நாட்டின் மேன்மை மீளத்
              தக்க காலம் வந்ததோ!
குளிர்ந்த என்றன் உள்ளம் போலக்
              குறைவி லாது நின்றுநீ
       குற்ற மற்ற சேவை செய்து
              கொற்ற மோங்கி வாழ்குவாய்!       1