அற்புதப்பிறவி காந்தி அற்புத மரணம் உற்றார்; கற்பனை கடந்த சாந்தன் கடவுளிற் கலந்து கொண்டார்; பற்பல நினைந்து பேசிப் புலம்புதல் பயித்தி யந்தான்! நற்குணச் சீலன் காந்தி சொற்படி நடப்போம் வாரீர். 2 உடலொடுவந்து போகும் உருவினில் தெரிவது அன்றிக் கடவுளை உலகில் யாரும் நேருறக் காண்பது இல்லை; அடைவரும் கருணை அந்தக் கடவுளின் அன்பு தன்னை நடைமுறை வாழ்விற் செய்த காந்தியே நமது தெய்வம்! 3 எத்தவம் முயலு வோர்க்கும் இருந்திட வேண்டும் என்னும் சத்தியத் தூய வாழ்வின் சற்குணப் பாறை போன்று நித்தமும் நமக்கு முன்னால் நின்றுகொண்டு அறிவு சொல்லும் உத்தமன் காந்தி எம்மான் உடலுக்கா உளைந்து போவோம்? 4 நோன்புடன்மறைந்த காந்தி நுண்ணிய உடலின் சாரம் சாம்பலில் கரைந்து இன்று நதிகளில் கலந்து சத்தமாய்த் தேம்பிடும் உலகம் தேறத் திரைகடல் மூலம் சென்று ஏம்பலைப் போக்கி ஞான எழுச்சியைக் கொடுக்கும் எங்கும். 5 |