கன்மனம் உடையோர் ஏனும் கனிந்திடும் கருணை வாழ்வின் காந்தியே வீசும் சாந்தக் காந்தியே வாழ்க! வாழ்க! 6258.பூனா வெடிகுண்டு விந்தையில் விந்தை!காந்தியின் மேலும் வெடிகுண்டை யாரோ வீசினராம்! இந்தும தத்தில் வந்தவர் யாரும் இப்படி யும்செய ஓம்புவரோ நிந்தையில் நிந்தை இதைவிட வேறும் இந்திய நாட்டிற்கு வந்திடுமோ! இந்தவி பத்தில் காந்தியைக் காத்தது எந்தப் பொருளதைச் சிந்தை செய்வோம். 1 சத்தியம்மெய்யே சாந்தமும் மெய்யே சாதித்(து) உயர்ந்திட்ட சாதுக்கள்மெய் நித்தமும் நின்று நம்மை நிறுத்து நீதி செலுத்திடும் ஜோதியும்மெய் பொய்த்திடும் பொய்யே போனது ஐயம் புண்ணியம் என்பது உண்மைஅதை உத்தமர் காந்தியின் மெய்த்தவவாழ்வினில் உண்டு வெடித்திட்ட குண்டுசொலும். 2 மடமையினாலே செய்தனர் என்றே மன்னித்து வாழ்த்திய பொன்னுரையால் அடவியிற் சென்றே ஐம்புலன் வென்றார் அந்தணர் முந்துரை தந்தவெலாம் நடைமுறை தன்னில் தினசரி வாழ்வில் நாட்டிடைக் காந்திஜி காட்டி விட்டார் கடவுளும் உண்மை கருணையும் உண்மை; காத்திடும் என்பது பார்த்துவிட்டோம். 3 |