422நாமக்கல் கவிஞர் பாடல்கள்

வித்தைகளின்நித்தியவி வேக பானு
       விடியிருளில் தடைவிலக்கும் வெள்ளிவிண்மீன்
எத்திசையும் மாலுமிக்கும் இடம்கண்(டு) ஏற
       இமயம்என இலங்குகலங் கரைவிளக்காம்
உத்தமருள் உத்தமனாம் காந்தி என்னும்
       ஒப்பரிய செகச்சோதி ஒளிந்தது ஐயோ!       2

சூரியனும்சந்திரனும் தொலைந்தார் என்ன,
       சுற்றியுள்ள மீன்களிலும் இருளே சூழ,
காரிருளில் கடியஇருள் கவிந்து யாரும்
       கண்ணிழந்து புண்ணிழந்து கலங்கி ஏங்க,
நேருகின்ற பொழுதில் எல்லாம் கவலை நீங்க
       நிச்சயம்தன் உள்ளிருந்தே ஒளியைநீட்டும்
யாரும்இந்த உலகில்இது வரையிற் காணா
       அற்புதமின் சாரசக்தி அறுந்துபோச்சே!       3

எப்படித்தம்உடல்வளர்த்தும் எதுசெய் தாலும்
       என்னென்ன காயகற்பம் இழைத்துஉண் டாலும்
தப்பிடவே முடியாது தடையில் லாமல்
       தலைசிறந்த மனிதர்களும் சாக வேண்டும்,
முப்பொழுதும் உலகநலம் மூச்சாய்க் கொண்டு
       முறைதவறாத் தவவாழ்வே முடித்த காந்தி
இப்படித்தம் உயிர்கொடுத்த பெருமை அன்றோ
       என்றென்றும் நின்றுஒளிரும் இரவியாகும்.       4

உலகறிந்த அறிவையெலாம்ஒன்றாய்ச் சேர்த்தே
       ஒருசிறிய காந்தி என்ற உடலில் வைத்தார்
அலகில்பல அற்புதங்கள் நடத்தி வைக்கும்
       ஆண்டவனின் திருவுளத்தை அறிவார்யாரோ!
இலகும்ஒரு காந்தியிடம் இருந்த சத்தை
       இவ்வுலகில் பலபேர்கள் பகிர்ந்துகொண்டு
கலகம்வரின் அங்கங்கே கருணை காட்டிக்
       காக்கவென்றே இறைவன்இதைக் கருதினானோ?       5