பொதுநலத்தைக்காந்தியைப்போல் பொழுதும் எண்ணிப் பொறுப்புணர்ந்து சேவைகளைப் புரிய வேண்டும் பொதுப்பணத்தைக் கண்போலப் போற்றி எந்தப் பொழுதும் அதன் கணக்குகளைப் பொறித்துநீட்டித் துதிப்பதற்கோ தூற்றுதற்கோ கொடுத்தி டாமல் தூய்மையுள்ள அறங்களுக்குத் துணைமையாக்கும் மதிநலத்தை காந்தியைப்போல் மனதிற் காத்து மக்களுக்குத் தொண்டுசெய்வோர் மலியவேண்டும். 12 மதம்எனும்ஓர்வார்த்தையையே மறந்து வாழ்ந்தான் மாசறியா அன்பினையே வளர்த்தவள்ளல் சதம்எனும்ஓர் சத்தியத்தைச் சார்ந்தி டாத சடங்குகளை விட்டுஒழிக்கச் சக்திதந்தான் விதவிதமாய் உடைநடைகள் விரிந்திட்டாலும் வேற்றுமையுள் ஒற்றுமையே விளக்கி வைத்தான் இதம்மிகுந்த காந்திஎம்மான் சரித்தி ரம்தான் இந்நாட்டில் வேதம்என இசைக்க வேண்டும். 13 ஜாதிகுலம்பிறப்புஎண்ணும் சபலம் விட்டோன் சமதர்ம சன்மார்க்கம் சாதித் திட்டோன் நீதிநெறி ஒழுக்கம்என்ற நிறைகள் அன்றி நேர்மையற்ற தேர்வுகளை நீக்கி நின்றோன் ஆதிபரம் பொருளான கடவுட்கு அல்லால் அகிலத்தில் வேறுஎதற்கும் அஞ்சாச்சுத்தன் சோதிபெருங் கருணைவள்ளல் காந்தி சொல்லே சுருதியென மக்கள்எல்லாம் தொழுதல்வேண்டும். 14 மந்திரங்கள்ஏவாமல் மயங்க வைத்தான்! மாயங்கள் புரியாமல் மலைக்கச் செய்தான்! தந்திரங்கள் இல்லாமல் தலைவன் ஆனான்! தண்டனைகள் பேசாமல் தணியச் செய்தான்! அந்தரங்கம் ஒற்றர்இல்லா அரசன் ஆனான்! அண்ணல்எங்கள் காந்திசெய்த அற்புதங்கள் எந்தஒரு சக்தியினால் இயன்றது என்றே எல்லோரும் கூர்ந்தறிய எண்ண வேண்டும். 15 |