462நாமக்கல் கவிஞர் பாடல்கள்

‘மீன்விழி உடையாள்‘ என்றால்
       மீனிலே கருமை இல்லை
‘தேன்மொழிக்(கு) உவமை‘ சொன்னால்
       தெவிட்டுதல் தேனுக்கு உண்டு;
‘கூன்பிறை நெற்றி‘ என்றால்
       குறைமுகம் இருண்டு போகும்.       1

‘மயிலெனும் சாயல்‘ என்றால்
       தோகைபெண் மயிலுக்கு இல்லை
‘குயிலெனும் குரலாள்‘ என்றால்
       ஏழிசை குயிலுக்கு இல்லை.
‘வெயில்ஒளி மேனி‘ என்றால்
       வெயிலிலே வெப்பம் உண்டாம்.
‘அயிலெனும் பார்வை‘ என்றால்
       அழிவின்றி ஆக்கம் இல்லை.       2

‘சந்திர வதனம்‘ என்றால்
       சந்திரன் மறுநாள் தேய்வான்.
‘அந்தரப் பெண்போல்‘ என்றால்
       அவளைநாம் பார்த்தது இல்லை
‘செந்திரு மகள்போல்‘ என்றால்
       திருவினைக் கண்டார் யாரே!
சுந்தர வடிவென் றாலும்
       சொல்லிலே வலிமை இல்லை.       3

‘கூந்தலை மேகம்‘ என்றால்
       மேகத்தில் கருமை, கொஞ்சம்
‘காந்தனைக் கைபோ‘ல் என்றால்
       கேட்டதே கண்டது இல்லை.
போந்ததும் வாடிப் போகும்
       முல்லைதான் பல்லுக்கு ஈடோ?
‘ஏந்திழை‘ என்றுஇட் டாலும்
       இயற்கையின் எழிலைப் போக்கும்.       4