புலவர் சிவ. கன்னியப்பன் 463

‘விரல்களைப் பவளம்‘ என்றால்
       வீணையை மீட்ட லாமோ?
‘குரல்வளை சங்கம்‘ என்றால்
       சங்குஒலி குமுறிக் கூவும்
‘கரம்அதைக் கமலம்‘ என்றால்
       மாலையில் கமலம் கூம்பும்
‘ஒருமரம் மூங்கில் தோளுக்(கு)
       உவமை‘என் றுரைக்க லாமோ?       5

‘குமிழ்என மூக்கைச்‘ சொன்னால்
       கூர்மையும் நேர்மை இல்லை.
‘அமிழ்துஅவள் பாடல்‘ என்றால்
       தேவரே அமுதம் உண்டார்.
‘தமிழ்‘எனும் இனிமை என்றால்
       தனித்தமிழ் இப்போது இல்லை.
‘கமழ்மணம் தேசம் என்றால்
       கன்னியின் தாயே காண்பாள்.       6

பற்பல உவமை சொல்லிப்
       பண்டிதர் களுக்கும் கூடக்
கற்பனை புரிந்தி டாத
       கட்டுரை பின்னிக் காட்டும்;
சொற்பல அடுக்க வேண்டாம்;
       சுருக்கமாய்ச் சொல்லப் போனால்
அற்புத அழகு முற்றும்
       இயற்கையில் அமைந்த நங்கை.       7

கண்டவர் மறக்க மாட்டார்;
       கேட்டவர் காணப் போவார்;
அண்டையில் பழகி னோர்கள்
       அவளைவிட்டு அகல மாட்டார்.
பெண்டுகள் வந்து வந்து
       பேசுதற்(கு) ஆசை கொள்வார்.
சண்டையும் சலிப்பும் எல்லாம்
       சாந்தமாம் அவளைச் சார்ந்தால்.       8