தன்னினும் அறிந்தார் முன்னே தான்தனி மடமை தாங்கும் நன்னயம் இல்லாச் சொல்லைக் கேட்கவும் நாணம் கொள்வாள் அன்னியர்க் கேனும் தீமை ஆற்றிட அச்சம் கொள்வாள் மன்னவர் தவறி னாலும் மதித்திடாப் பயிர்ப்பு மண்டும். 9 தனக்குறும் தந்தை தாயர் தருக்கிடும் குழந்தை யாக மனக்குறை ஒன்றும் இன்றி மருட்டுவார் எவரும் இன்றி இனக்குறை இல்லார் தம்மோடு இச்சைபோல் ஓடி யாடி வனக்கிளி போலக் கொஞ்சி வளர்த்தவள் வறுமை இன்றி. 10 இயற்கையின் நலமும், நல்லோர் இணைப்பினால் நேர்ந்த பண்பும்; செயற்கையாம் பகுப்பும் மிக்க செம்மையாய்ச் சேர்ந்த தாலே மயக்கிலா அறிவும், நல்லோர் மதித்திடும் பொறுப்பும் வாய்ந்து வியப்பொடும் எவரும் கண்டு விருப்புற விளங்கி நின்றாள். 11 மிதந்திடும் செல்வம் மிக்க மேட்டிமை சிறிதும் இல்லை. அதிர்ந்துஒரு வார்த்தை பேசும் அகத்தையும் அறிய மாட்டாள். சுதந்தர இயல்பி னோடு சுதந்தரப் பழக்கம் சேர்ந்தும் இகந்தரக் குலவிப் பேசி எவரையும் சமமாய் எண்ணும் 12 |