பள்ளியிற் பெண்கட் கான பல்கலைக் கழகந் தன்னில் ஒள்ளிய முறையில் கற்றே உயர்தரப் பட்டம் பெற்றாள்; வெள்ளையர் நாக ரீக விதங்களும் விரும்பிக் கற்றுக் கள்ளமும் கபடும் இன்றிக் களையிலாப் பயிர்போல் நின்றாள். 13 உடைகளில் சுத்தம் பார்ப்பாள்; உணவிலே சுத்தம் பார்ப்பாள்; கடைகளில் வாங்கும் பண்டம் காய்கறி சுத்தம் பார்ப்பாள்; நடைமுறை ஒழுக்கம் காப்பாள்; நாவுரை நலத்தைக் காப்பாள்; தடையுற நொந்த பேரைத் தாயெனத் தாங்கும் தக்காள். 14 குழலொடு வீணை நாதம் குரலொடும் இசையக் கூட்டிப் பழுதறப் பாடிக் கேட்போர் பரவசம் அடையச் செய்வாள் விழலுறப் பொழுது போக்கும் வீண்சுகம் விரும்ப மாட்டாள்; எழிலுடைப் பெண்மைக் குற்ற இருப்பிட மாவாள் என்போம். 15 மாதர்கள் சங்கம் கூட்டி மகளிர்தம் உரிமை காக்க ஆதரம் தேடும் பேச்சே அடிக்கடி நடக்கச் செய்வாள். தீதுறும் வழக்கம் எல்லாம் தீர்ந்திட வேண்டும் என்றே ஓதரும் ஊக்கத் தோடும் உழைத்திடும் ஒன்றே ஆசை. 16 |