புலவர் சிவ. கன்னியப்பன் 467

வேட்டையே பெண்கள் என்ற
       விருப்பையே விளக்கும் என்பாள்.       20

அவள்பெயர் கமலம் எல்லாச்
       செல்வமும் அமைந்த வீட்டில்
தவம்எனப் பெற்றோ ருக்குத்
       தனியொரு குழந்தை யாவாள்
நவநவ நாக ரீக
       நடையுடை இருப தாண்டு
யுவதியாய் உலகில் நல்ல
       கவிதைபோல் உயர்ந்து நின்றாள்.       21

283. அவன்

(‘அவளும் அவனும்‘ என்னும் நூலினின்று
தொகுக்கப்பெற்றது)

நீண்டன கைகள்; ஆழ்ந்து
       நிமிர்ந்தது அகன்ற மார்பு;
தீண்டிடக் கல்லைப் போலத்
       திரண்டன இரண்டு தோளும்;
தூண்எனத் தோன்றும் கால்கள்;
       துணைதர நடக்கும் பாதம்
ஆண்தகை மற்றும் தக்க
       அளவொடும் அமையப் பெற்றோன்.       1

அறிவொளி வீசும் கண்கள்;
       அறவுரை பேசும் நாக்கு;
செறிதரும் சிகையை வெட்டித்
       திகழ்தரச் சீவி விட்டுச்
சிறிதல பெரிதும் அல்ல
       சீரெனும் மூக்கி னோடும்
குறிகளும் நெறிகள் யாவும்
       குணமுளான் என்றே கூறும்.       2