கண்டவர் களிக்கும் தோற்றம்; கேட்டவர் மதிக்கும் ஆற்றல் அண்டையில் பழக்கம் இல்லார் அடக்கமாய் அணுகு வார்கள்; சண்டைகள் ஒடுங்கும் கண்டால் சலிப்புகள் சளைப்புக் கொள்ளும்; தொண்டுசெய் ஏவ லாளர் துணுக்கொடு வணக்கம் செய்வார். 3 படிப்பினில் பட்டம் பெற்றான்; பந்துகள் கையால் காலால் அடிப்பதில் பதக்கம் பெற்றான்; அரங்கினில் வேடம் பூண்டு நடிப்பதில் பரிசு பெற்றான்; நாடிய எதையும் நன்றாய் முடிப்பதில் முயற்சி மிக்கான் முற்றிலும் விரும்பத் தக்கான். 4 செல்வரில் செல்வன் என்ற சிறப்புள பிறப்பு வாய்ந்தான்; கல்வியில் ஆசை மிக்கான்; கவிதையில் நேசம் மிக்கான்; பல்விதக் கலைகள் வேண்டிப் பயிற்சியும் முயற்சி செய்வான்; நல்வழி என்னத் தக்க நடைநொடி யுடைய நண்பன். 5 அழகுள எதையும் கண்டே அளவிலா ஆசை கொள்வான்; பழகிடும் எதிலும் உள்ள அழகையே கண்டு பேசும் எழுதிடும் எழுத்தில் எல்லாம் அழகையே ஏற்றிப் போற்றித் தொழுதிடும் தெய்வ மாக அழகையே தூக்கி வைப்பான். 6 |