புலவர் சிவ. கன்னியப்பன் 475

285. தென்றல்

தென்றல் குலவிவரும் - நல்ல
       தென்மொழி தேனைத் தரும்
நன்றுள சேதிகளே - சொல்ல
       நம்மிடைத் தூதுவரும்.       1

உள்ளம் கிளர்ச்சிபெறும் - படி
       உடலம் குளிர்ச்சியுறும்
கள்ளமனக் குறும்பும் - சற்றுக்
       கவலையறத் திரும்பும்.       2

காதலைக் கொண்டுவரும் - இன்பக்
       கதைளை மொண்டுதரும்
நோதலைப் போக்கிவிடும் - நம்மை
       நூதனம் ஆக்கிவிடும்.       3

வேகங்கள் மாறிவிடும் - ஏதும்
       வெஞ்சினம் ஆறிவிடும்
தாகம் தணிந்ததுபோல் - உள்ளம்
       தண்மை அணிந்திடுமே.       4

நற்குணம் பேசிவரும் - ஞான
       நறுமணம் வீசிவரும்
பற்பல நாட்டவரின் - உயர்
       பண்புகள் கூட்டிவரும்.       5

பகைமை மறந்திடவும் - அன்பின்
       பற்று நிறைந்திடவும்
தகைமை மிகுந்ததுவாம் - தென்றல்
       தன்னை உகந்திடுவோம்.       6

கவிதை நிறைந்துளதாய் - ஆழக்
       கல்வி சிறந்ததுவாய்ச்
செவியில் முணுமுணுக்கும் - அதில்
       செம்மை கிணுகிணுக்கும்.       7