பலகற்றும் அறிவென்ற பயனற்று நித்தம் கலகத்தை விளைவித்துக் கவலைக்குள் கத்தும் உலகத்தை ஒருசற்றுப் பொழுதேனும் விட்டு விலகற்கும் அமைதிக்கும் வெகுநல்ல இடமே. 2 அன்புஒத்த சுகமூட்டும் அதிலுள்ள பசுமை, இன்பத்தின் களிகூட்டும் பலபட்சி இசைகள்; தென்புற்ற அறிவுஒக்கும் தெளிவான தண்ணீர்; துன்பத்தை மறைவிக்கத் துணையாகும் என்னே! 3 கோபங்கள் மிதமிஞ்சிக் கொதிகொண்டு வெந்து பாபங்கள் புரிகின்ற பழுதுற்று நொந்து தாபங்கள் வெகுவாகத் தணிவுற்றே அறிவும் சோபிக்க இடம்இந்தப் பூஞ்சோலை செய்யும். 4 மண்ஒன்று, நீர்ஒன்று, மழையென்பது ஒன்றே பண்ணைக்குச் செய்நேர்த்தி பாட்டாளி ஒன்றே எண்ணற்ற நிறபேதம் எதிலுற்றது என்றே கண்ணுற்ற பூஞ்சோலை கதைசொல்ல நின்றேன். 5 யார்செய்வது இதுவென்றே அதிவிந்தை எய்திப் போர்செய்த பலஎண்ணம் புந்திக்குள் செய்து நேர்செய்த அறிவுற்று நினைவுற்ற பொழுதே ஓர்தெய்வம் உளது என்னும் உணர்வுற்றுத் தொழுதேன். 6 குறிப்புரை:- தென்பு - மகிழ்ச்சி; விலகல் -நீங்கல்; மிதமிஞ்சி - அளவுக்கு மீறி; நிறபேதம்- இனவேறுபாடு. 288. கதிரொளி கதிரொளி வந்தது களிப்பினைத் தந்தது. மதிதெளி வுற்றது மயக்கமும் அற்றது. |