தயவொன்றிப் பயமின்றித் தமிழ்மக்கள் வாழ்வோம்; தமிழ்மக்கள் வாழ்வோம். குறிப்பு :- சுழல் - திருவடி; களி - மகிழ்ச்சி; அகிலம் - உலகம்; தயவு - பக்தி, அருள். 26. பாரதி பாட்டு அச்சமிகும் பேடிகையின் அடிமை வாழ்வில் அடங்கியிருந்து அறம்மறந்த தமிழர் நாட்டைப் பச்சைமரத் தரணியெனப் பதியும் சொல்லால் பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று. நிச்சயமெந் தாய்நாட்டின் அடிமை வாழ்வை நீக்காமல் விடுவதில்லை! எனமுன் வந்து துச்சமெனச் சுகத்தையெல்லாம் துறந்து நிற்கத் தூண்டியது பாரதியின் சொல்லே யாகும். 1 படித்தறியா மிகஏழைக் கிழவனேனும் பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில் துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக் கொட்டித் துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி, ‘எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை இப்பொழுதே இக்கணமே!‘ என்றென் றார்த்திங்கு; அடித்துரைத்தே ஆவசம் கொள்வான் என்றால் அப்பாட்டின் பெருமைசொல யாரே வல்லார்;2 புத்தொளியிற் பழந்தமிழ்க்கோர் புதுமை பூட்டிப் புத்துயிரும் புதுமணமும் புகுத்தி ஞானச் சத்தியொளி மிகவிளங்கும் சொற்க ளாலே தாய்நாட்டின் தளையறுக்கும் தவமே பாடி எத்திசையும் இளந்தமிழர் இன்று கூடி ‘இறந்தேனும் ஈன்றவளை மீட்போம்!‘ என்று பத்தியொடும் அறப்போரில் முனைந்து நிற்கப் பண்ணினது பாரதியின் பாட்டே யாகும். 3 |