பொதுநலமே பூஷணமாய்ப் பூண்டு நின்றான் பொறுமையுடன் வறுமையையும் போற்ற லானான். துதிபெறும்ஓர் ஆசையில்லாக் கர்ம யோகத் தூயமனத் தொண்டன்எனத் துலங்கு கின்றான். 2 மங்கிநின்ற சங்கீதம் மணக்கச் செய்தான் மறைந்துநின்ற நாட்டியத்தை விளங்க வைத்தான்; பங்குகொண்டு நாடகத்தில் வேடந் தாங்கிய பரிமளிக்கச் செய்துவைத்தான் அரங்கம் தன்னைச் சங்கமெனப் பலகலைக்கும் சபைகள் கூட்டிச் சாத்திரத்தை விளக்குகின்ற சர்ச்சை செய்தான்; எங்கும்இந்நாள் இளம்பெண்கள் ஆடிப் பாடி இன்பளித்தல் இவனுழைப் பயனே காண்போம். 3 அலைகொள்ளும் மனக்குரங்கை அடங்கச்செய்து இங்(கு) ஆனந்த மேலீட்டின் அமைதி கூட்டி நிலையின்பத் தெய்வத்தை நினைக்கத் தூண்டும் நீர்மையுள்ள சங்கீதம், நிருத்தம்என்னும் கலையின்பம் தருகின்ற களிப்பை அல்லால் மற்றெதையும் இன்பமெனக் கருத மாட்டேன். விலையென்று தனக்கெதையும் விரும்பிடாத விழுமியனும் ஈகிருஷ்ணஐயன் மெய்யே. 4 அன்புவழி இன்னதென அறிந்த நல்லோன்; அருள்சேர்ந்த செயல்களுக்கே ஆர்வ முள்ளோன்; துன்பமுற நேர்ந்தவர்கள் எவர்க்கு ஆனாலும் துணைபுரியத் துடிதுடிக்கும் தூய நெஞ்சன்; இன்பமும் மாறாத இனிய சொல்லன்; ஈகிருஷ்ண ஐயரெனும் எங்கள் நண்பன்; தென்புடனே கலையறிவைத் திகழச் செய்யும் திருப்பணிக்காய் நீடூழி வாழ வேண்டும். 5 |