297. கலைமன்றம் வாழ்க! (இம்மன்றம் ஹௌராசிப்பூர் வாழும் தமிழர்களின் மன்றம்) எம்மொழி எதையும் வாழ்த்தி எவரொடும் நட்பே பூண்டு தம்மொழிக்(கு) ஆக்கம் தேடும் தமிழ்மனப் பண்பைக் காத்தே இம்மையும் மறுமை ஞானம் இசைத்திடும் வள்ளு வன்பேர் செம்மையிற் பூண்ட சிப்பூர் கலைமன்றம் செழித்து வாழ்க. 1 ஒன்றாக உயர்ந்த ஞானம் உயிர்க்கொலை புரிந்தி டாமை நன்றாகும் அதன்பின் ஏதும் நலங்கெடப் பொய்சொல் லாமை என்றுஓதும் அறிவே நல்கும் இணையிலா வள்ளு வன்பால் குன்றாத பக்தி கூட்டும் கலைமன்றம் குலவி வாழ்க. 2 நிலைகொண்டு மக்கள் எங்கும் நிரந்தரம் குலவி வாழத் தலைநின்ற அறிவே காட்டும் தமிழன்னை பாதம் போற்றிக் கலைமன்றச் சேவை செய்யக் களிப்புடன் கடமை பூண்ட தலம்ஒன்றும் ஹௌரா சிப்பூர் தமிழன்பர் பலரும் வாழ்க. 3 |