புலவர் சிவ. கன்னியப்பன் 501

வட்ட வடிவத் திலகமும் - புது
       வண்ணம் கொடுத்த மலர்களும்
பட்டு சரிகையும் இன்றியும் - தங்கப்
       பாவை எனும்படி நின்றனள்.       3

கன்னி அழகினைக் கண்டுநான் - சொக்கிக்
       கட்டி அணைத்திட அண்டினேன்
அன்னையெனக் கண்டு நாணினேன் - அவள்
       அடியில் விழுந்துடல் கோணினேன்.       4

‘அன்னிய எண்ணம் நிறைந்ததால் - பெற்ற
       அன்னையை முற்றும் மறந்துநான்
என்னமதி கெட்டுப் போயினேன்‘ என்று
       ஏங்கித் தவித்திடல் ஆயினேன்.       5

தேனினும் தித்திக்கும் சொல்லினால் - என்னைத்
       தேற்றி மகன்எனப் புல்லினாள்;
வானில் உயர்ந்து பறந்தவன் - போல்
       வந்த வருத்தம் மறந்தனன்.       6

பாமர சொற்களில் பேசினாள் - வெறும்
       பண்டித வார்த்தைகள் கூசினாள்;
ஏமுறும் ஏழையை வாழ்த்தினாள் - செல்வர்
       இந்திர மோகத்தைத் தாழ்த்தினாள்.       7

தெய்வத் தமிழ்மொழிப் பெண்ணவள் - இந்தத்
       தேசப் பெருமைக்குக் கண்ணவள்;
வையம் முழுதையும் வாழ்த்துவாள் - பிறர்
       வாழ்த்திடத் தன்சுகம் தாழ்த்துவாள்.       8

பற்பல ஆயிரம் ஆண்டுகள் - இந்தப்
       பாரில் இருந்தறம் பூண்டவள்;
அற்புதம் இன்னமும் கன்னியே! - புது
       அழகுத ரும்தமிழ் அன்னையே.       9