நாற்றிசைத் தமிழ ரெங்கும் நாட்டினைப் பணியச் செய்த நாவலர் சுப்ர மண்ய பாரதி நாமம் வாழ்க! 10 குறிப்புரை:- குற்றேவல் - அடித்தொண்டு; கோன் - அரசன்; திறல் - வெற்றி; சவம் -பிணம்; தூர்த்தரை - கொடியோரை, வஞ்சகரை. 27. தமிழ் எனத் துலங்க வைப்போம் தமிழன்னை திருப்பணி செய்வோமே தரணிக்கே ஓரணி செய்வோமே அமிழ்தம் தமிழ்மொழி என்றாரே! அப்பெயர் குறைவது நன்றாமோ? 1 அன்பு நிறைந்தவள் தமிழன்னை அருளை அறிந்தவள் தமிழன்னை இன்பக் கலைகள் யாவையுமே ஈன்று வளர்த்திடும் தேவியவள். 2 பக்தி நிறைந்தது தமிழ் மொழியே பரமனைத் தொடர்வது தமிழ் மொழியே சக்தி கொடுப்பவள் தமிழ்த் தாயே சமரசம் உரைப்பவள் தமிழ்த்தாயே. 3 வண்ணம் மிகுந்திடும் மனமுடையாள் வாய்மையை வணங்கும் இனமுடையாள் தண்மை அளித்திடும் இலக்கியத்தாள் தாரணி புகழ்ந்திடும் இலக்கணத்தாள். 4 மாநிலம் முழுதும்ஓர் சமுதாயம் மக்களுக் கெல்லாம் ஒருநியாயம் தானென அறிஞர்கள் தலைவணங்கும் தருமம் வளர்த்தவள் தமிழணங்கே. 5 |