52நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அந்நிய மொழிகளை அருவருக்கும்
அற்பத் தனங்களை அவள் வெறுக்கும்
நன்னயம் மிகுந்தவள் தமிழ் மாதா
நாகரி கத்தின் தனித் தூதாம்.       6

பற்பல மொழிகளைப் பகுத்தறிந்தாள்
பாருள அறிவினைத் தொகுத்துரைப்பாள்
அற்புத மாகிய மனப்பெருமை
அடங்கிய தேதமிழ்த் தனிப்பெருமை       7

மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர்போல்
மதிப்பது தமிழ்மொழி முன்னுரையாம்
தன்னலம் துறந்திடும் தகவுடையாள்
தவநெறி வாழ்க்கையின் புகழுடையாள்       8

அந்நிய வாழ்க்கையின் ஆசையினால்
அன்னையை மறந்தோம் நேசர்களே!
முன்னைய பெருமைகள் முற்றிலுமே
முயன்றால் தமிழகம் பெற்றிடுமே       9

புதுப்புது ஒளிகளில் அலங்கரிப்போம்
பூரணம் தமிழ்எனத் துலங்கவைப்போம்
மதிப்புடன் படித்தவர் மகிழ்ந்திடுவார்
மாநிலத் தறிஞர்கள் புகழ்ந்திடுவார்.       10

அன்னிய மொழியே தினம்பேசி
அன்னையைப் பணிந்திட மனம்கூசி
இன்னமும் இருந்தால் தமிழ்மொழியே
இறந்திடும் உனக்கது பெரும்பழியே.       11

தமிழன் என்பதை மறக்காதே
தாய்மொழிப் பெருமையைத் துறக்காதே
‘அமிழ்தம் தமிழ்மொழி‘ ஐயமில்லை
அகிலம் நுகர்ந்திடச் செய்திடுவோம்.       12

குறிப்புரை:- தகவு - உரிமை (8); நேசம் - அன்பு; (9)
அகிலம் - நிலவுலகம், பூமி. (12)