28. தமிழிசையின் தத்துவம் ‘இசை‘ எனல் கருத்துடன் ஓசையும் இசைவதாம் ‘கற்றலில் கேட்டலே நன்றெ‘னும் கட்டுரை படிப்பிற்கு மட்டுமா? பாட்டிற்கும் உண்டு. படித்துக் கற்றிடும் அறிவைப் பார்க்கினும் கேட்டுக் கற்றிடும் அறிவே கெட்டியாம். 5 என்னும் தத்துவம் இசையினால் பலம்பெறும் செவிவழி நுழைந்தே உணர்ச்சியைத் திரட்டி அறிவைத்தேடும் ஆவலுண் டாக்கி எண்ணச் செய்கிற ஓசையே இசையாம். ஓசைகள் மட்டுமே உணர்ச்சிஉண் டாக்கலாம். 10 அழுவதற் கென்றோர் ஓசையை அறிவோம்; சிரிப்பதைக் காட்டும் சத்தமும் தெரிவோம்; அச்சம் குறிக்கிற ஒலியையும் அறிவோம்; அதிசயப் பட்டால் அதற்கொரு தனிஒலி; ஐயம் வினாக்களும் ஓசையால் அறியலாம்; 15 அபயக் குரலையும் ஓசையால் அளக்கலாம்; எல்லா உணர்ச்சியும் ஓசையால் எழலாம்; எனினும் ஓசையே இசை ஆகாது. ‘சங்கீதம்‘ என்பது ஓசையின் சங்கதி. சப்த சுரங்களைச் சமர்த்தாய்க் கலந்து 20 நீட்டலும் குறுக்கலும் தெளித்தலும் செய்து நீரவல் செய்து பரவல் நிரப்பிக் கற்பனை மிகுந்த ஓசைகள் காட்டவே சாமான்ய மாகச் ‘சங்கீதம்‘ என்பது. அதிலே மட்டுமோர் ஆனந்த மிருக்கலாம். 25 நாதப் பிரம்மமும் அதிலே நாடலாம்; அதைப்பற்றி இங்கே ஆராய்ச்சி இல்லை; ஓசையை மட்டும் ரசிப்பவர் உண்டு. |