தேற்றிடவே முன்னின்றாய் தெளிவுடையாய் தாதாபாய் நவரோ ஜியே! தேவருடன் கலந்தனையோ எங்குறையை அங்கவர்க்குச் செப்ப வேண்டி? 1 ‘இருங்கிழவி பெருந்தேவி இந்தியநா டெம்மையெலாம் ஈன்ற தாயின் உறுங்கிழமை சுதந்தரங்கள் ஒன்றேனும் குறையாமல் வந்தா லன்றி நெருங்கிய நோய் பஞ்சங்கள் ஒருபோதும் நீங்கா‘ வென்றுறுதி சொன்ன பெருங்கிழவா! தாதாபாய் நவரோஜி! உன்பெருமை பெரிதே யாகும். 2 ‘பேசுவதால் பெறுவதில்லை பிதற்றுவதால் பெருமையில்லை பிறரை நொந்தே ஏசுவதால் நேசமில்லை இழிந்ததனால் களித்ததில்லை என்று சொல்லித் தாசனென உழைத்திடவே வேண்டுமென்று தளராமல் உழைத்துக் காட்டி ஆசையுடன் நீயுரைத்த அம்மொழியை எக்காலும் மறவோம் ஐயா! 3 உடலமது தளர்ந்தாலும் உன்னுறுதி தளராமல் உழைத்து நின்றாய்; சடலமது மானிடராய்ப் பிறந்தவர்கள் இதைவிடவும் சாதித் தாரோ? கடலுலகில் பிறந்தவர்கள் கணக்கற்றா ரென்றாலும் கருதில் நீயே அடைவரிய சென் மத்தின் அரும்பயனை அறிந்தவரை அடைந்தாய் ஐயா! 4 பணமிருந்தும் பெருமையில்லை; பந்துஜன மித்திரர்கள் பறந்து சூழ்ந்தும் |