100நாமக்கல் கவிஞர் பாடல்கள்

54. பாரதி எனும் பெயர்

பாரதி எனும் பெயரைச் சொல்லு - கெட்ட
       பயமெனும் பகைவனை வெல்லு.
நேரினி உனக்குநிகர் இல்லை - உடன்
       நீங்கும் அடிமைமனத் தொல்லை.       1

சுப்ரமண்ய பாரதியின் பாட்டு - பாடிச்
       சோம்பல், மனச் சோர்வுகளை ஓட்டு,
ஒப்பரிய தன்மதிப்பை ஊட்டும் - அதுவே
       உன்பலத்தை நீஉணரக் காட்டும்.       2

துள்ளிக் குதித்துவரும் சந்தம் - செயல்
       தூண்டித் துணைபுரியும் சொந்தம்
அள்ளிக் கொடுத்தபெரும் உறவோன் - நம்
       அருமைப் பாரதியை மறவோம்.       3

அன்பு நிறைந்ததமிழ் மொழியில் - செயல்
       ஆண்மை குறைந்ததெனும் வழியில்
தென்பு மறந்துழன்ற போதில் - நல்ல
       தீரம் கொடுக்கவந்த தூதன்.       4

அமைதி குலவும்தமிழ்ச் சொல்லில் - பல
       ஆற்றல் புகுத்திவிட்ட வல்லன்
நமது பாரதியின் பாட்டே - தமிழ்
       நலத்தைக் காக்கும் ஒரு கோட்டை.       5

இனிமையான தமிழ்ப் பாஷை - அதில்
       ‘இல்லை வேகம்‘ எனும் ஓசை.
முணகிப் பேசும்ஒரு வகையை - வென்று
       முழங்கும் பாரதியின் இசையே.       6

முன்னோர் பெருமைமட்டும் பேசிப் - புது
       முயற்சி ஒன்றுமின்றிக் கூசிச்
சின்னா பின்னமுற்று வாடும் - நாம்
       சீர்தி ருந்தக்கவி பாடும்.       7