புலவர் சிவ. கன்னியப்பன் 103

பிறந்தவர்கள் எல்லோரும் இறந்தே போவார்
       பின்னிருக்கும் தலைமுறையர் பெருமை கொள்ளும்
அறந்தெரிந்து வாழ்ந்தவரே அறிஞராவர்
       அன்னவர்க்கே மக்களெல்லாம் அருமை செய்வார்
திறந்தெரிந்து காந்திமகான் ஜோதி யான
       திருவிளக்கு மங்காமல் தினமுங் காத்து
மறைந்துவிட்ட வல்லபாய் நமக்குத் தந்த
       மணிவிளக்கை நாம்காத்து வாழ வேண்டும்.       5

குறிப்புரை :-குளிர்மதி - சந்திரன், நிலா; மங்காமல் - அழியாமல்;
பலகோடி - அளவில்லாமல், எண்ணற்ற.

56. உ.வே. சாமிநாத ஐயர்

பேச்செல்லாம் தமிழ்மொழியின் பெருமை பேசிப்
       பெற்றெதெல்லாம் தமிழ்த்தாயின் பெற்றி யென்று
மூச்செல்லாம் தமிழ்வளர்க்கும் மூச்சே வாங்கி
       முற்றும்அவள் திருப்பணிக்கே மூச்சை விட்டான்.
தீச்சொல்லும் சினமறியாச் செம்மை காத்தோன்
       திகழ்சாமி நாதஐயன் சிறப்பை யெல்லாம்
வாய்ச்சொல்லால் புகழ்ந்துவிடப் போகா துண்மை;
       மனமாரத் தமிழ் நாட்டார் வணங்கத் தக்கோன்.1

அல்லுபகல் நினைவெல்லாம் அதுவே யாக
       அலைந்தலைந்தே ஊரூராய்த் திரிந்து நாடிச்
செல்லரித்த ஏடுகளைத் தேடித் தேடிச்
       சேகரித்துச் செருகலின்றிச் செப்பம் செய்து
சொல்லரிய துன்பங்கள் பலவும் தாங்கிச்
       சோர்வறியா துழைத்தஒரு சாமிநாதன்
இல்லையெனில் அவன்பதித்த தமிழ்நூ லெல்லாம்
       இருந்த இடம் இந்நேரம் தெரிந்தி டாதே.       2