146நாமக்கல் கவிஞர் பாடல்கள்

89. மனிதப் பிறப்பின் புதுமை

பல்லவி

மனிதப் பிறப்புக்கொரு புனிதப் புதுமைதந்த
மாதவன் காந்தி மகான்

அநுபல்லவி

நினைதற் கரியஒரு மிகவும் புதியநெறி
நித்திய நல்லொழுக்க சத்திய சோதனையால்       (மனித)

சரணங்கள்

காட்டில் தனித்திருந்து காய்கனி மூலம்உண்டு
கடுந்தவம் தமக்கென்றே புரிந்த கதைகளுண்டு
நாட்டில் வசித்துப்பிறர் நலத்துக்கென்றே உழைத்த
நற்றவம் காந்தியைப் போல் மற்றவர் யாரிழைத்தார்?       (மனித)1

உலகைத் துறந்த பின்னும் உடலிற் பிரியம் வைத்தே
ஓடுவர் காயகற்பம் தேடுவர் காட்டைச் சுற்றிச்
சலுகைப் பிறஉயிர்க்கே; தன்னுயிர் ஆசைவிட்டு
சாதித்த நன்னெறியால் போதித்த பொன்மொழியால்,       (மனித)2

உணவில் கிடைப்பதல்ல உடைகள் கொடுப்பதல்ல
உடலைப் பொறுத்தல்ல உணர்வைக் கடைப்பிடித்து
மணலில் நதிஅடியில் மறைந்துள்ள ஊற்றினைப்போல்
மக்களுக் குள்ளிருக்கும் சக்தியைப் போற்றினதால்.       (மனித)3

90. காணாத அற்புதங்கள் கண்டது

பல்லவி

காணாத அற்புதங்கள் கண்டதே இவ்வுலகம்
காந்தி மகான் வாழ்வில்       (காணா)

அநுபல்லவி

காணாத நல்லறிவைக் கொடுக்கும் அவர்வழியைக்
கொள்ளா விடில்உலகில் கொடுமைகள் குறையாது.       (காணா)