புலவர் சிவ. கன்னியப்பன் 157

மதமென்றும் நிறமென்றும் மொழியென்றும் வழியென்றும்
மக்களைப் பிரித்தென்றும் துக்கத்தைப் பொழிகின்ற
சதிகார ஆசைகளின் அதிகாரம் தொலைக்கவும்
சன்மார்க்க சமரசம் நமதென்றும் நினைக்கவும்.       (அறி)2

வீரத்தின் பேரைச்சொல்லி வெறிதந்து போரை மூட்டும்
வீணுரை சூழ்ச்சியெல்லாம் நாணுறச் செய்(து) ஓட்டும்
தீரத்தின் சாத் விகத்தைத் தியாகத்தின் தெய்வீகத்தைத்
திடமான மெய்யுணர்வைத் தெரிவித்தே உய்யவைக்கும்.       (அறி)3

104. நலம் பெற உழைப்போம்

பல்லவி

இந்தியத் தாயின் இயல்பாகும்
எம்மான் காந்தியின் செயல்யாவும்.

அநுபல்லவி

முந்தினன் உலகினில் யாவரினும்
முப்பகை வென்றநல் மூதறிவின்       (இந்திய)

சரணங்கள்

அந்தமில் இறைவனின் அருள்நாடும்
அன்பே அறிவெனத் தினம்தேடும்
செந்தமிழ் மொழிதரும் சீலமெலாம்
சேர்ந்தது காந்தியின் வேலையெல்லாம்       (இந்திய)1

இமயம் மலைமுதல் ஈழம்வரை
எண்ணரும் த்யாகிகள் இன்றுவரை
தமதரும் தவத்தால் தரும்ஞானம்
தரணியில் இன்றுள மெய்ஞ்ஞானம்       (இந்திய)2

அந்தமெய்ஞ் ஞானத்தின் ஒளியாகும்
அற்புதன் காந்தியின் வழியாகும்
இந்தநம் உரிமையை இழப்போமோ?
இப்புவி நலம்பெற உழைப்போமே.       (இந்திய)3

குறிப்புரை:-அந்தமில் - முடிவில்லாத; தரணியில் - உலகில்