214நாமக்கல் கவிஞர் பாடல்கள்

யுத்தம் என்ற மோகமும்
       உலகை விட்டுப் போகுமா?
பித்தர் என்று நம்மையே
       பேசு வார்கள் பேசின்என்?       13

புத்தர் வந்து போனதும்
       புனிதன் காந்தி வந்ததும்
பொய்த்துப் போக ஒண்ணுமோ?
       புவனி ஓங்கி வாழுமே!       14

156. வீரமும் தீரமும்

ஆயுதம் தாங்கி அரண்களில் மறைந்தே
ஏமாந் திருக்கும் எதிரியைக் கொல்வதும்
சீவனம் செய்யச் சேனையில் சேர்ந்தும்
உடைகள் தரித்து நடைகள் பயின்றும்
எந்திரம் போல ஏவல் கேட்டும்       5

கொடுமை புரிவதும் கொல்வதும் சாவதும்
வீரமும் அன்று; தீரமும் அன்று.
வீரமோ தீரமோ விரும்பிப் பழகும்
செயற்கை அன்ன இயற்கை சேர்ந்தது.
வீரமும் தீரமும் வெவ்வேறு அல்ல.       10

இரண்டும் நெருங்கி இணைந்த குணங்கள்.
வீரம் என்பது வீட்டையும் நாட்டையும்
அக்கம் பக்கம் யாரையும் காக்கும்.
அன்போ டியைந்த ஆண்மையே வீரம்
எதிரி யிடத்திலும் இரக்கமே காட்டும்.       15

காதல் என்பதைக் கண்ணெனப் போற்றும்.
கற்பெனும் சொல்லின் நற்பொருள் நாடும்.
நட்பெனும் பதத்தின் உட்பொருள் உணரும்.
துன்பம் என்றால் துணைசெயத் துடிக்கும்.
வஞ்சனை செய்து வாழ்வதை வெறுக்கும்.       20