238நாமக்கல் கவிஞர் பாடல்கள்

குணங்களில் உயர்ந்திட நலங்கொடு்க்கும்
       கொடுமையை எதிர்த்திடப் பலங்கொடுக்கும்
வணங்கிய வாயுரை மொழிகூட்டும்
       வாழ்க்கையின் பயன்பெற வழிகாட்டும்.       11

சாதியை மதங்களை மறந்திடவும்
       சமரச உணர்ச்சிகள் நிறைந்திடவும்
நீதியை அறங்கள் நினைப்பூட்ட
       நிரந்தரக் களஞ்சியம் அவன்பாட்டு.       12

பண்டிதர் புகழ்ந்திடல் போதாது
       பாமரர் மகிழ்திடத் தோதாகப்
பெண்டிரும் பிள்ளையும் அதைப்படித்துப்
       பெருமைக ளடைந்திடும் விதம் கொடுப்போம்.       13

ஆராய்ச் சிகளால் மயங்காமல்
       அவைதரும் சண்டையில் தயங்காமல்
நேராய்க் கம்பனைப் படிப்பவரே
       நிச்சயம் கவிரசம் குடிப்பவராம்.       14

திருநாள் நட்புடன் நில்லாமல்
       தினந்தினம் படித்திட எல்லோரும்
வருநாள் கண்டு களித்திடவே
       வாழிய தமிழுக் குழைத்திடுவோம்.       15

176. கம்பன் விழா

செம்பொருளும் சொற்பெருக்கும் தெளிந்த ஞானம்
       தேடுகின்ற இலக்கியமும் செறிந்த தாகும்
நம்பெரிய தமிழ்மொழிக்குப் பெருமை நாட்டி
       நானிலத்தில் கவிஞருக்குள் தலைவன் என்றே
அப்புவியின் பலமொழிகள் படித்தா ராய்ந்த
       அறிஞர்களில் பெரும்பாலார் ஆமோ திக்கும்
கம்பனுடைத் திருநாளில் கலந்தோர்க் கெல்லாம்
       கைகூப்பி வரவேற்போம்; கடவுள் காக்கும்!       1