ஐயா மறுப்பினும் அம்மா மறுத்திடாள். ஒருபிடி அன்னமோ உப்பிட்ட கஞ்சியோ ஐயமிட் டுண்பதே அருந்தமிழ்ப் பெண்மை அதனால் தானோ என்னமோ அறியோம் தமிழன் இல்லறம் தனிச்சிறப் புடையதாய். 15 வறுமையும் அடிமையும் வருத்திடும் நாளிலும் கொடுமைகள் குறைந்து குலவிடச் செய்வது. வாழிய தமிழ்தரும் வண்மைசேர் பெண்மை! குறிப்புரை:- பெண்மை - அமைதித் தன்மை; பூசனை - வழிபாடு. 200, பெண்மை அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும் உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும் தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும் இயல்பாய் அமைந்தும் இன்பச் சொரூபமாய்த் தாயாய் நின்று தரணியைத் தாங்கும்; 5 தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்; உடன்பிறப் பாகி உறுதுணை புரியும்; மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்; அயலார் தமக்கும் அன்பே செய்யும்; நாணம் கெடாமல் நட்புகொண் டாடும்; 10 சினேகம் இன்றியும் சிரித்துப் பேசும்; காமமில் லாமலும் கொஞ்சிக் களிக்கும்; பெருமை மிக்கது பெண்ணியல் பாகும்; அந்தப் பெருமையை அறியா ஆடவர் அன்புப் பேச்சை ஆசையென்று அயிர்த்துச் 15 சிரித்து விட்டதில் சிற்றின்பம் எண்ணி, களிப்பைக் காமமாய்க் கற்பனை செய்தே அவமதிப் படைவதும் அடிக்கடி உண்டு. |