208. நோயற்ற வாழ்வு உலகினில் சிறந்த தென்றும் உருவினில் பரந்த(து) என்றும் உயர்தவ யோக சித்தர் ஒப்பிலார் இருந்த(து) என்றும் பலவளம் நிறைந்த(து) என்றும் பகுத்தறி வுயர்ந்த(து) என்றும் படித்தனம் கேட்டோம் அந்தப் பாரத தேச மக்கள் புலபுல வென்று நித்தம் புதுப்புது நோய்க ளாலே புழுக்கள்போல் விழுந்து மாண்டு போவதைக் கண்டும் ஐயோ விலகிட வழிதே டாமல் விலங்கினம் போல வாழ்ந்து விதியென வாதம் பேசி வீணராய் இருத்தல் நன்றோ? 1 கற்பமும் அறிந்து காய சித்தியும் கற்க மேலோர் பற்பலர் இருந்த இந்தப் பாரத தேச மக்கள் அற்பமாய் ஆயுள் குன்றி ஆழ்ந்திடல் ஏனோ வென்று சொற்பனந் தன்னிற் கூட எண்ணிடத் துணிந்தோம் இல்லை. 2 உடல்வலி மிகுந்த நல்ல ஊக்கமும் உறுதி பொங்க உலகினில் இன்பம் எல்லாம் உயர்வழி அனுப வித்த திடமுள தீர வீரர் திகழ்ந்தஇச் சிறந்த நாட்டில்
|