400நாமக்கல் கவிஞர் பாடல்கள்


வல்லாண்மை நமக்குவர வாழ்ந்து சென்ற
       வள்ளுவனே மறுபடியும் வந்தான் என்னச்
சொல்லாண்மை புகழவொண்ணாக் கருணை சோதி
       சுத்தன்எங்கள் காந்திமகான் நாமம் வாழ்க.       4

அணுகுண்டுவித்தைகளும் அணுக ஒண்ணா
       அப்பாலுக்கு அப்பாலாம் அறிவாய் நிற்கும்
இணையற்ற பெருங்கருணை எல்லாம் வல்ல
       இறைவனையே மூச்சாக இழுத்துப் பேசித்
துணைகொண்டு அவனருளைத் தொடர்ந்த காந்தித்
       தூயவனே இந்தியத்தாய் சோதியாகும்
அணைகண்டு மதவெறியை அடக்கத் தேக்க
       அவன்வழியே மக்களுக்கு அமைதல் வேண்டும்.       5

சாந்தவழிஉலகமெலாம் போற்ற வேண்டும்;
       சத்தியத்தை அரியணையில் ஏற்ற வேண்டும்;
மாந்தருக்குள் போர்வெறிகள் மறைய வேண்டும்;
       மக்களிடம் அன்புஅறங்கள் நிறைய வேண்டும்;
சோர்ந்துழலும் ஏழையெலாம் சுகிக்க வேண்டும்;
       சுத்தர்களே அரசாட்சி வகிக்க வேண்டும்;
காந்திமகான் திருநாமம் வாழ வேண்டும்;
       கடவுள்என்ற பெருங்கருணை காக்க வேண்டும்.       6

250. சத்குருவானகாந்தி

துறந்தவர் மிகுந்த நாட்டைத்
       துறந்திடும் துன்பம் எல்லாம்
துறந்தவர் குறைந்த நாட்டைத்
       தொடர்ந்திடும் துன்பம் எல்லாம்
அறிந்தவர் மொழிக ளாலும்
       அனுபவ அறிவி னாலும்
அறிந்தனம் அதனை இந்தத்
       தேசமும் மறந்தது அந்தோ!       1