புலவர் சிவ. கன்னியப்பன் 409

253. மாந்தருக்குள்மாமணி

காந்தியெனும் பேரொளியே!
       கருணைபொழி வான்முகிலே!
சாந்திநிறை பாத்திரமே!
       சன்மார்க்க சாத்திரமே!
மாந்தருக்குள் மாமணியே!
       மாநிலத்தின் அற்புதமே!
ஏந்துபுகழ் மோகனமே!
       என்சொல்லி அஞ்சலிப்போம்.       1

இதமுரைக்கும் வானொலியே!
       இருள்கிழிக்கும் மின்விளக்கே!
பதமறிந்த பேச்சாளா!
       பயனறிந்த எழுத்தாளா!
மதவெறிக்கே பலிபுகுந்த
       மாயாப் பெரும்புகழே!
துதிஉரைக்கச் சொல்லறியோம்
       தொழுகின்றோம் துணைபுரிவாய்;       2

அன்பெடுத்ததிருவுருவே!
       அருள்அமரும் ஆசனமே!
துன்பமுற்றோர் துணைக்கரமே!
       துயர்நீ்க்கும் தூதுவனே!
இன்பமெலாம் பிறர்க்குதவி
       இன்னல்எலாம் தாங்கிநிற்கும்;
தென்புஇருக்கும் தேசிகமே!
       திருவடிக்கே அஞ்சலித்தோம்!       3

இல்லறத்தின்சிறப்பிடமே!
       துறவறத்தின் இருப்பிடமே!
நல்லறங்கள் யாவினுக்கும்
       நடுவான நன்நெறியே!