புலவர் சிவ. கன்னியப்பன் 431

இஞ்ஞா லத்தின்துயர்நீக்க
       இந்தியத் தாயின் பெயர்காக்க
மெய்ஞ்ஞா னத்தின் உருவேபோல்
       மேவிய காந்தியின் வரவாலே       6

ஆயுதபலங்களில் மதிப்பிழந்தோம்;
       ஆன்ம பலத்தின் துதிப்பறிந்தோம்;
தீயன போர்வெறி இழுக்குகளைத்
       திக்குகள் யாவினும் முழக்கிடுவோம்.
தாயினும் இனியவன் இந்நாட்டின்
       தந்தைநம் காந்தியின் வழிகாட்டும்
தூயநல் லருள்நெறி சூழ்ந்திடுவோம்;
       துன்பம்இல் லாமல் வாழ்ந்திடுவோம்.       7

குறிப்புரை:-மேவிய - பொருந்திய; திக்குகள் - திசைகள்

265.காந்தீயமும் தமிழனும்

பரதேசி என்றுவந்தோர்யாரா னாலும்
       பரிவோடே உபசரித்துப் பங்கும் தந்த
ஒருதேசம் உலகத்தில் இருக்கு மானால்
       உண்மையது தமிழ்நாடு ஒன்றே ஆகும்;
வருதேச காலத்தின் வர்த்த மானம்
       வகைவேறு காட்டுகின்ற வருத்தம் ஒன்றும்
கருதாமல் நமதுகுணம் கலைந்தி டாமல்
       கருணையொன்றே பின்பற்றிக் கடமை செய்வோம்.       1

தமிழ்நாட்டின் சரித்திரத்தை மனத்தில் வைத்துத்
       தாராளத் தமிழர்களின் தன்மை காத்தே
அமிழ்தான தமிழ்மொழியில் அடங்கி யுள்ள
       அகிலத்தின் நல்லறிவாம் அனைத்துங்கண்டு
நமதாகும் மிகச்சிறந்த நாக ரீகம்
       நானிலத்துக்(கு) இப்போது நன்மை காட்ட
எமதாகும் மிகப்பெரிய கடமை யென்றே
       எண்ணியெண்ணித் தீர்மானம் பண்ண வேண்டும்.       2