44நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தமிழகம் வாழ்கநல் தமிழ்மொழி வளர்ந்தெம்மைத்
       தாங்கிடும் இந்தியத்தாய் தவம் பலிக்க
குமிழும் நுரையும்என்னக் கூடி மனிதரெலாம்
       கொஞ்சிக் குலவிடுவோம் குவலயத்தில்.       (தமிழா)11

23. தமிழ் நாடு எது? தமிழன் யார்?

வலைவீச ஆசைதரும் அலைவீசும்
       வயலும்மற்ற வளங்க ளாலோ
விலைவாசிக் கவலையின்றி விருந்தோம்ப
       எதிர்பார்க்கும் விருப்பத் தாலோ
தலைவாசற் கதவினுக்குத் தாள்பூட்டே
       இல்லாத தமிழ்நாடென்று
பலதேசம் சுற்றிவந்த மகஸ்தனிசும்
       புகழ்ந்துரைத்த பழைய நாடு!       1

பற்றொழித்த பெரியவரே பகுத்துரைக்கும்
       அரசுமுறை பணிந்து போற்றிக்
கற்றறிந்த அரசர்களே காவல்செய்த
       சரித்திரமே காணும் நாடு;
மற்றெரிந்த வீரனென்று மமதையுள்ள
       மன்னவரை மதிக்கா நாடு;
சற்றுஒருவர் வருந்திடினும் தாம்வருந்தும்
       அரசாண்ட தமிழர் நாடு.       2

வேங்கடமும் குமரியிடை விரிகடல்சூழ்
       நிலப்பரப்பை வேறாய் ஆண்டு
வாங்குகிற வரிப்பணத்தின் வரையறுக்க
       அரசமுறை வகுத்த தல்லால்
ஈங்குவட இமயம்வரை இந்தியரின்
       நாகரிகம் ஒன்றே யாகும்;
தாங்கள்ஒரு தனியென்று நடைபோட்டுத்
       தருக்கினவர் தமிழர் அல்லர்.       3